நியூசிலாந்து கிரிக்கெட்டின் மாபெரும் தூணான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒட்டுமொத்த விளையாட்டு உலகிற்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

16 ஆண்டுகால அசாத்திய கிரிக்கெட் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள வில்லியம்சன், எளிதில் தகர்க்க முடியாத பல இமாலய சாதனைகளை நியூசிலாந்து மண்ணில் விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் முக்கியமான 5 மைல்கற்கள் இதோ.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள்: நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை வில்லியம்சன் தன்வசம் வைத்துள்ளார். 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.06 சராசரியுடன் 9,515 ரன்கள் குவித்துள்ளார். இதில் 33 சதங்களும், 38 அரைசதங்களும் அடங்கும். இவருக்கு அடுத்த இடத்தில் ராஸ் டெய்லர் (7,683 ரன்கள், 19 சதங்கள்) உள்ளார். தற்போதைய கேப்டன் டாம் லேதம் 16 சதங்களுடன் நீண்ட தூரத்திற்குப் பின்னால் இருக்கிறார்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அசுர சாதனை: மூன்று வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து, நியூசிலாந்து வரலாற்றிலேயே அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்தவர் வில்லியம்சன் தான். 378 சர்வதேச போட்டிகளில் விளையாடி 19,346 ரன்களையும், 48 சர்வதேச சதங்களையும் விளாசி அசைக்க முடியாத வரலாற்றுப் பட்டியலின் உச்சத்தில் அமர்ந்துள்ளார்.

அதிவேகமாக 9,000 டெஸ்ட் ரன்கள்: நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிவேகமாக 9,000 டெஸ்ட் ரன்களைக் கடந்த வீரர் கேன் வில்லியம்சன் தான். வெறும் 182 இன்னிங்ஸ்களில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். உலக அளவில் குமார் சங்கக்காராவுக்கு (172 இன்னிங்ஸ்) அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டிய டாப் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

நியூசிலாந்தின் ‘பெஸ்ட்’ டெஸ்ட் கேப்டன்: நியூசிலாந்தை வழிநடத்திய கேப்டன்களிலேயே மிகச்சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்தவர் வில்லியம்சன். அவர் கேப்டனாக இருந்த 40 டெஸ்ட் போட்டிகளில், 22 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது; 10 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது. இவரது கேப்டன்சி வெற்றி விகிதம் 55% ஆகும்.

உலகக்கோப்பையில் கேப்டனாக இமாலய ரன்கள்: ஒரு குறிப்பிட்ட ஒருநாள் தொடரில், நியூசிலாந்து கேப்டனாக அதிக ரன்கள் குவித்த சாதனையும் இவரையே சேரும். 2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் கேப்டனாக வில்லியம்சன் 578 ரன்கள் குவித்து அசத்தினார். இதற்கு முன்னதாக 1992 உலகக்கோப்பையில் மார்ட்டின் குரோவ் கேப்டனாக 456 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இப்படி பேட்டிங், கேப்டன்சி, மனிதநேயம் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த ஒரு ‘ஜென்டில்மேன்’ கிரிக்கெட் சகாப்தம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version