தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மக்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஏற்கனவே முதலமைச்சருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சேலம் தெற்கு தொகுதியில் இருந்து போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்ற விஜய் தமிழன் பார்த்திபன், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் இவர் வசித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில் விஜய் தமிழன் பார்த்திபன் சேலம் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார். சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பார்த்திபன், எதிர்த்து நின்ற வேட்பாளரை விட 33,369 வாக்குகள் அதிகம் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வெற்றி, உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் பின்னணி இல்லாத பொதுமக்களில் இருந்து உயர்ந்து வந்த இவரது பயணம், பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
எளிய தொழிலதிபரில் இருந்து அமைச்சர் வரை:
சேலம் பகுதியில் ஆரம்ப காலத்தில் பிரௌசிங் சென்டர் நடத்தி வந்த பார்த்திபன், பின்னர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் சிறிய மொபைல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். 12ம் வகுப்பு வரை படித்துள்ள, சமூக சேவையில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், விஜய் மக்கள் இயக்கத்தின் ஊடாக பல்வேறு நலன் திட்டங்களை முன்னெடுத்து வந்தார். குறிப்பாக, ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு முகாம்கள், உதவித் திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தார்.
நடிகர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வரும் பார்த்திபன், திரைப்பட விநியோகத் துறையிலும் ஈடுபட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் விஜயின் பல படங்களுக்கு விநியோகஸ்தராகப் பணியாற்றியுள்ளார். மேலும், விஜய் நடித்த 15 திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. குறிப்பாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘கோட்’ (GOAT) படத்தில் போக்குவரத்துக் காவலர் வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். மேலும் கத்தி, ஜில்லா ஆகிய படங்களிலும் விஜய் தமிழன் பார்த்திபன் போலீஸ் கேரக்டரில் தான் நடித்திருப்பார். அந்த அளவுக்கு விஜய் தமிழன் பார்த்திபன் மீது விஜய் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்.
33 வருட தொடர்ச்சியான நட்பு, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் சேவை ஆகியவற்றின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அமைச்சரவையில் பார்த்திபனுக்கு முக்கியப் பொறுப்பை வழங்கியுள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பார்த்திபன், மாநிலத்தின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், மக்களின் பயண வசதிகளை அதிகரிக்கவும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம், தவெக அரசு புதிய ஆற்றலுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற புதிய அமைச்சர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை அளிப்பார்கள் என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
