கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், உதட்டில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சையளிக்க சென்ற 18 மாதக் குழந்தை, மயக்க மருந்து கொடுக்கப்பட்டதில் ஏற்பட்ட உடல்நலச் சிக்கல்களால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு, திருமணமான எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஒரே குழந்தையை இழந்த அந்தப் பெற்றோரின் நிலை அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.
கடந்த ஜூலை 5-ம் தேதி, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது குழந்தையின் உதட்டில் காயம் ஏற்பட்டது. சிகிச்சையளிக்க அருகில் உள்ள பையனூர் பேபி மெமோரியல் மருத்துவமனைக்குக் குழந்தையை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் தையல் போடுவதற்காக குழந்தைக்கு மயக்க மருந்து வழங்கியுள்ளனர். ஆனால், மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, குழந்தை சுயநினைவு திரும்பாமல் போனதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிலைமை மோசமானதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காகக் கண்ணூரில் உள்ள மருத்துவமனையின் மற்றொரு கிளைக்குக் குழந்தை மாற்றப்பட்டது. அங்குச் சிகிச்சை பலனின்றி, வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மயக்க மருந்து நிபுணர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 125-ன் கீழ், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாகம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. முறையாகவும், சரியான அளவிலேயே மயக்க மருந்து வழங்கப்பட்டதாகவும், இருந்தபோதிலும் எதிர்பாராத விதமாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தையைக் காப்பாற்ற அனைத்துவிதமான அவசரக்கால மருத்துவ முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
