திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் பல்வேறு அளவில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சூழலில், அவரது பிறந்தநாள் விழாவின்போது நடிகை திரிஷாவுடன் கேக் வெட்டி மகிழ்ந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால், எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் இணைந்து கேக் வெட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் நள்ளிரவு 12 மணிக்கு முதல் நபராக வாழ்த்து தெரிவித்ததாகவும் 00:00 என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், சிலரிடையே கடும் விமர்சனத்தை சந்தித்தது.

https://x.com/DMKITwing/status/2069432838529974733

முன்னதாக, சட்டமன்றத்தில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டு வரப்பட்ட கேக்கை வெட்ட வேண்டாம் என விஜய் திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியான நிலையில், அதே நாளில் திரிஷாவுடன் தனிப்பட்ட முறையில் கொண்டாட்டம் நடத்தியது முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது. துயர சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் தலைமை செயலகத்தில் அல்லது பொது இடத்தில் கேக் வெட்டுவது பொருத்தமற்றது எனக் கருதியதாகக் கூறப்பட்டாலும், தனிப்பட்ட கொண்டாட்டம் தொடர்ந்தது பலரது கண்களில் படாத விஷயமாக இல்லை.

இந்நிலையில், திமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. ‘திருப்பாச்சி’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியைப் பகிர்ந்து, “அமோனியா வாயு கசிவில் 9 பேர் உயிரிழந்து, 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட முதல்வருக்கு வரும் வாழ்த்துகள் அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன” எனப் பதிவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உடனடி உதவி வழங்க வேண்டும் என்பதுடன், முதல்வர் தரப்பில் இருந்து விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version