கோயம்புத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் செயலிழந்த நிலையில், ஓட்டுநரின் அசாத்தியமான சமயோசித புத்தியாலும் பொதுமக்களின் உதவியாலும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவையிலிருந்து கோவில்பாளையம் வழியாக குன்னத்தூர் நோக்கிப் புறப்பட்ட அந்தத் தனியார் பேருந்து, வழக்கம்போல பயணிகளுடன் கோவில்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறியது. அந்தச் சமயத்தில் பேருந்துக்குள் நாற்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

கோவில்பாளையம் சாலையை பேருந்து கடக்க முயன்ற மிக முக்கியமான தருணத்தில், ஓட்டுநர் பிரேக் மிதிக்க முயன்றுள்ளார். ஆனால் பிரேக் ஒயர் துண்டிக்கப்பட்டு, வாகனம் தன் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்ததை உணர்ந்து அவர் அதிர்ச்சியடைந்தார். பேருந்து கட்டுப்பாடின்றி ஓடுவதை அறிந்த பயணிகள் மரண பயத்தில் கூச்சலிடத் தொடங்கினர்.

அந்த இக்கட்டான பதற்றமான விநாடிகளில், சற்றும் மனந்தளராத ஓட்டுநர், சாலையின் ஓரத்தில் இருந்த மண் திட்டு மற்றும் மேடான பகுதிகளை நோக்கிப் பேருந்தை லாவகமாகத் திருப்பி அதன் வேகத்தைக் குறைக்கப் போராடினார். பேருந்து விசித்திரமாக வருவதைக் கவனித்த அங்கிருந்த உள்ளூர் மக்களும் உடனடியாக களத்தில் குதித்தனர்.

சாலையின் இருபுறமும் வந்த பிற வாகனங்களைச் சைகை காட்டி அப்புறப்படுத்திய பொதுமக்கள், பேருந்தின் வேகம் ஓரளவுக்குக் குறைந்த தருணத்தில், சக்கரங்களின் அடியில் பெரிய கற்களை முட்டுக் கொடுத்துப் பேருந்தை வெற்றிகரமாக நிறுத்த உதவினர்.

நொடிப் பொழுதில் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் இதன் மூலம் தவிர்க்கப்பட்டு, பேருந்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர். ஆபத்தான சூழலிலும் பதற்றமடையாமல் சாதுரியமாகச் செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய அந்த ஓட்டுநரை ‘ரியல் ஹீரோ’ எனப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version