அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான எப்-35 லைட்னிங் II-ஐ தயாரிக்கும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்று, நட்பு நாடுகளுக்கு இந்த விமானங்களை வழங்குவது. பிரிட்டன் உள்ளிட்ட பல கூட்டணி நாடுகள் ஏற்கெனவே இந்த விமானங்களைப் பெற்றுள்ள நிலையில், துருக்கிக்கும் எப்-35 விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெதன்யாகு அளித்த பேட்டியில், “துருக்கி ஆக்கிரமிப்பு எண்ணங்களுடன் செயல்படுகிறது. அதிநவீன எப்-35 விமானங்களை துருக்கிக்கு வழங்குவது மத்திய கிழக்கின் அதிகார சமநிலையை முற்றிலுமாக சீர்குலைக்கும்” என்று எச்சரித்தார். தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்து ஈரான் அணுசக்தி விவகாரம் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகளைப் பேச உள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நெதன்யாகுவின் எதிர்ப்பை நிராகரித்தார். “யார் என்ன சொன்னாலும், நாங்கள் எதை விற்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். துருக்கியை “மிகச் சிறந்த நட்பு நாடு” என்று புகழ்ந்த டிரம்ப், சிரியா உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகளில் துருக்கியின் பங்களிப்பைப் பாராட்டினார். துருக்கி இஸ்ரேலை விரும்பவில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், அமெரிக்கா-துருக்கி உறவு வலுவானது என்று வலியுறுத்தினார்.
கடந்த 2019-ம் ஆண்டு, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியதால், டிரம்பின் முதல் ஆட்சியில் துருக்கி எப்-35 திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. எனினும், சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின்போது டிரம்ப், எஸ்-400 தொடர்பான தடைகளை நீக்கவும், எப்-35 விமானங்களை வழங்கவும் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இந்த முடிவு மத்திய கிழக்கு அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல்-துருக்கி இடையேயான பதற்றம் அதிகரிக்கும் சூழலில், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
