கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியையும், இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாட்டையும் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டின் உரிமைகளையும், நலன்களையும் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது ஏற்க முடியாத செயலாகும் எனக் கூறியுள்ள செல்வப்பெருந்தகை,
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை நடைமுறையில் இருக்கும் நிலையில், அவற்றின் நோக்கத்தையே பாதிக்கும் வகையில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டப்பூர்வமாகவும், நீதியுடனும், கூட்டாட்சி தத்துவத்துடனும் பொருந்தாதது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டமும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனக் கூறியுள்ள செல்வப்பெருந்தகை,
அதேவேளையில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் ஒன்றிய அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல், ஒரு புறம் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு மறைமுகமாக அல்லது நிர்வாக ரீதியாக ஆதரவளிப்பது போன்ற இரட்டை அணுகுமுறையை கடைப்பிடிப்பதைக் கண்டித்துள்ளார்.
மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு, அரசியல் லாப-நஷ்டக் கணக்குகளை விடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பையும், கூட்டாட்சி தத்துவத்தையும் மதித்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதியாகப் பாதுகாக்கும் வகையில், மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படாது என்பதை ஒன்றிய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள செல்வப்பெருந்தகை,
தமிழ்நாட்டின் நியாயமான உரிமையைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும், விவசாய அமைப்புகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
