சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் சிலர் தொலைபேசி மூலம் பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், ஒரு நபர் தன்னைத் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்த நபர் திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். அவர், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி பேச்சுவார்த்தை நடத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கான பணம் தரப்படும் என அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.35 கோடி வரை வழங்க முன்வந்ததாகவும் இளையராஜா கூறியுள்ளார். மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு இந்த சதியில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இருவரும் விசாரணைக்கு ஆஜராகி, முன் ஜாமின் பெற்ற நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரத்தில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த கணேசன், ரகு பிரகாஷ், சாமியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் சதியின் முழு பின்னணியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் இதை ஆளும் கட்சியின் அழுத்தம் எனக் குற்றம்சாட்ட, ஆளும் தரப்போ இது அரசியல் சதி என்று மறுப்பு தெரிவித்து வருகிறது. விசாரணை முடிவுகள் வெளியான பிறகு முழு உண்மையும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
