கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவை தேர்தல் நடத்தவும் அதன் மூலமாக கல்வி நிலையங்களில் நுழைய தவெக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்படவும், ஆட்சியைப் பிடிக்கவும் முக்கியக் காரணமாக இருந்தது அன்றைய மாணவர் பட்டாளம்தான். இந்திக்கு எதிரானப் போராட்டமானாலும் மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டமாக இருந்தாலும் அன்று முன்னணியில் இருந்தது மாணவர் அமைப்புதான். இதுதான் 1967இல் திமுக ஆட்சியில் அமரவும் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து அண்மையில் வெளியான பராசக்தி படத்திலும் இதனைக் காட்சிப் படுத்தியிருப்பார்கள்.
இப்படி மாணவர்களின் முயற்சியால் ஆட்சிக்கு வந்த திமுக அதன்பிறகு கல்லூரிகளில் அரசியலை அனுமதிக்கவில்லை.
இந்தச் சூழலில்தான், கடந்த 19ஆம் தேதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ. மற்றும் ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபி நிர்வாகிகள் முதலமைச்சரை தனித்தனியே சந்தித்துள்ளனர். அப்போது கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் பேரவை தேர்தலை உடனடியாக நடத்தும்படி, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகளும் மாணவர் பேரவை தேர்தலை வலுவாக முன்வைத்துள்ளன.
தற்போது மாணவர் பேரவை தேர்தலுக்கு அனுமதி அளிப்பதை தவெகவுக்கு சாதகமான சூழலாகவும், தங்கள் அரசியல் செல்வாக்கை அதிகரிக்க முடியும் எனவும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நினைப்பதால் தேர்தலுக்கு அனுமதி அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
