அமெரிக்காவில் நடைபெறவுள்ள யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவோக் ஜோகோவிக் மற்றும் உலகின் நம்பர்-1 மகளிர் வீராங்கனை அர்ன்யா சபலென்கா ஜோடியாக களமிறங்க உள்ளனர்.
கடந்த ஆண்டு போட்டி வடிவம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் போட்டியில் ஆண்கள் உலகின் நம்பர்-1 வீரர் ஜான்னிக் சின்னர், (Jannik Sinner) மற்றும் உலகின் 2-வது நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) ஆகியோர் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகளின்படி, தொடக்கச் சுற்றுகளில் குறுகிய புள்ளி கணக்கு முறை அமல்படுத்தப்பட்டதுடன், ஒற்றையர் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு நாட்களில் கலப்பு இரட்டையர் போட்டிகளை நடத்தும் புதிய அட்டவணையும் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் முன்னணி வீரர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலியின் சாரா இரானி (Sara Errani) மற்றும் ஆண்ட்ரே வெவாசோரி (Andrea Vavassori) ஜோடி மீண்டும் பட்டத்தை தக்கவைக்க களமிறங்குகிறது. போட்டி வடிவ மாற்றங்களை அவர்கள் முன்பு விமர்சித்திருந்தாலும், கடந்த ஆண்டு அவர்கள் சாம்பியன் பட்டத்துடன் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையையும் வென்றனர்.
39 வயதான ஜோகோவிச் மற்றும் 28 வயதான சபலென்கா ஆகியோரின் ஜோடி, உலக தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் முதல் ஆறு ஜோடிகளில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. போட்டிக்கான பதிவு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நிறைவடைகிறது.
இதுகுறித்து அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Craig Tiley கூறுகையில், “ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே அணியாக விளையாடும் போது டென்னிஸின் சிறந்த முகம் ரசிகர்களுக்கு வெளிப்படுகிறது. உலகின் முன்னணி வீரர்களை ஒரே மேடையில் கொண்டு வரும் இந்த போட்டி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும்” என்றார்.
இதற்கிடையில், விம்பிள்டன் சாம்பியனான ஜானிக் சின்னர், உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் யுஎஸ் ஓபனுக்கு முன்பாக நடைபெறும் கனடியன் ஓபனிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் பங்கேற்கவில்லை.
மணிக்கட்டு காயத்திலிருந்து மீண்டு வரும் கார்லோஸ் அல்கராஸ், கடந்த ஆண்டு எமா ரேடுசானு (Emma Raducanu) உடன் இணைந்து விளையாடியிருந்த நிலையில், இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கவில்லை.
மேலும், எட்டு ஜோடிகள் வைல்ட்கார்டு மூலம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன. தகுதிச்சுற்று மூலம் மேலும் இரண்டு ஜோடிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும். கலப்பு இரட்டையர் போட்டிகள் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கவுள்ளன. அதன்பின் ஐந்து நாட்கள் கழித்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் தொடங்கும்.
