தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ள வைகோ, விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அறிவித்தார். அதே நேரத்தில், விஜய் தலைமையிலான அரசியல் மாற்றத்திற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்றார்.
மேலும் திமுக கூட்டணியில் இருந்தபோது தங்கள் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்பட்டதாகவும், சுயமரியாதையை காக்கவே கூட்டணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் குறித்து தகவல் கிடைத்ததாலேயே பொதுக்குழு முடிவின் அடிப்படையில் திமுகவிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
“எங்களை முதுகில் குத்தவில்லை; நெஞ்சில் குத்திவிட்டார்கள். இருந்தாலும் எங்கள் இயக்கத்தினர் உறுதியுடன் உள்ளனர்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசிய வைகோ, திமுக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பமாட்டார்கள் . இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விஜய்க்கு அதிக ஆதரவு உள்ளது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 35 முதல் 45 சதவீத வாக்குகளை பெறும் வாய்ப்பு உள்ளது . தமிழகத்தில் “ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சராக விஜய் இருப்பார் ” என்றார்.
தமிழக வெற்றிக்கழக சட்டப்பேரவை உறுப்பினருக்கு 35 கோடி பேரம் தொடர்பான விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியல் மோசடி நடந்துள்ளது அதில் திமுக–அதிமுக தொடர்பு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
