சட்டமன்றத்திற்குள் வைத்து எலும்பை உடைப்பேன் என்று தெரிவித்தது நாகரிகமான அரசியல் கிடையாது  என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னியரசு கூறியதாவது;-

இன்று மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு நாளில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கம் செலுத்த உள்ளோம். கடந்த காலங்களில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வந்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து ஆலோசனை செய்தார்கள். அவருடைய கோரிக்கைகள் தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருப்போம்.

சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயினின் பேச்சு வன்முறையை தூண்டும் விதமான பேச்சு. இது குறித்து சபாநாயகர் தெளிவுபடுத்தி உள்ளார். அவர் பேசியதில் உண்மையில்லை என்றால் நீதிமன்றம் விடுவித்திருக்கும். வன்முறையான பேச்சுகளை அவர் தவிர்க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் விசிகவின் கோரிக்கை. சோனம் வாங்சுக்கும், மாணவர் இயக்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழக முழுவதும் வருகிற 27ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட்தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

வடமாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு முன்பாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன இது மாணவர் போராட்டம். மாணவர்களுடைய உணர்வு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல கல்வியை பொதுப்பட்டியிலிருந்து மாநில பட்டியலிற்கு கொண்டு வர வேண்டுமென போராட்டம் நியாயமான போராட்டம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதிமுகவில் இருந்து போகின்ற சட்டமன்ற உறுப்பினர்களை ஒரே கட்டுப்பாட்டுக்குள், ஒரே தலைமைக்குள் கொண்டு வருவதுதான் சாதனையாக இருக்க வேண்டும். அந்த சாதனையை அதிமுக நிகழ்த்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு புள்ளியில் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து செயல்படுகிறோம். தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுகவும் இந்தியா கூட்டணியில் வரவேண்டும் என்று தொலைநோக்கு பார்வையில் சொல்லப்பட்டது இன்றைக்கும் அதே நிலைப்பாடு இருக்கிறது.

பாஜக ஆட்சி தூக்கி ஏறியப்பட வேண்டும், அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள். மாணவர்கள் போராட்டம் வெல்லும். பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு புள்ளியில் அனைவரும் இணைவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

திமுகவும் பாஜகவும் இணைவார்களா என்பது எனக்கு தெரியாது. பாரதிய ஜனதா எதிர்ப்பில் திமுக என்றும் உறுதியாக உள்ளதை நாடாளுமன்றத்தில் பார்க்கிறோம். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இன்றைக்கும் திமுக இந்தியா கூட்டணியுடன் இணைந்துதான் செயல்படுகிறது.

லாக்கப் மரணங்கள் மற்றும் காவல் சித்திரவதைகள் மரணம் இதுபோன்று நடக்கக்கூடாது என்பது தான் விடுதலைச் சிறுத்தைகள் நிலைப்பாடு. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். எங்களுடைய நிலைப்பாடு காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக எப்பொழுதும் நாங்கள் குரல் கொடுப்போம் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கும்.

தமிழக முதல்வர் நீட் தேர்வு தொடர்பாகவும், மாணவர் போராட்டம் தொடர்பாகவும் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை பொதுவெளியில் வைப்போம். பொதுமக்களே முடிவு செய்யட்டும். எலும்பை உடைப்பேன் என்றுபேசியது  எந்த வகையில் சரி? சட்டமன்றத்திற்குள் வைத்து எலும்பை உடைப்பேன் என்று கூறுவது நாகரிகமான அரசியல் கிடையாது வன்முறையை தூண்டும் விதமாக யாரும் பேசக்கூடாது.

தமிழக முதல்வரின் ஜனநாயகம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version