தவெகவுக்கு ஆதரவளிக்க விசிக தரப்பில் பல்வேறு பதவிகளை கோரி நிபந்தனைகள் விதித்து வருவதாக பரவி வரும் தகவல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க, காங்கிரஸ் (5) மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ( தலா 2) ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் 2 இடங்களைப் பெற்றுள்ள விசிக-வின் ஆதரவை எதிர்நோக்கி விசிக
தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த நிலையில், விசிக ஆதரவளிக்க வேண்டுமானால், துணை முதலமைச்சர் பதவி மற்றும் முக்கிய அமைச்சரவை பொறுப்புகள் கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என விசிக எம்.எல்.ஏ. வன்னியரசு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது இந்த விவாதத்திற்கு மேலும் வலுசேர்த்தது.
இந்த சூழலில் அறிக்கை வெளியிட்டுள்ள ரவிக்குமார், “விசிக பல்வேறு பதவிகளை நாடுவதாகவும், கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தற்போது பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு முரணானவை. அத்தகைய செய்திகளுக்கு ஊடகங்கள் நம்பகத்தன்மை அளிக்க வேண்டாம். மேலும், விசிக-வின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு ஊடகங்கள் உடந்தையாக வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, தவெக ஆட்சி அமைக்கும் முயற்சியில் விசிக ஆதரவு கிடைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ள விசிகயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்களுக்கு வழிவகுக்கும் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
