தமிழ்நாட்டில் தமிழ் பேசும் ஒருவர் தொடங்கும் கட்சி திராவிட கட்சிதான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்ய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், புதிய முதலமைச்சர் விஜய்யை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, சினிமா தொடர்பாக 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவரிடம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையம் வந்த கமல்ஹாசன்,  செய்தியாளர்கள் சந்தித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி எப்படி உள்ளது என்னும் கேள்விக்கு,  2 நாளில் சொல்லக்கூடியது ஜோசியமாகத்தான் இருக்கும். 6 நாளில் சொல்லக்கூடியதும், 5 நாளில் சொல்லக்கூடியதும் அப்படித்தான் இருக்கும். ஒரு 6 மாசம் டைம் கொடுக்க வேண்டாமா? என பதில் கேள்வி எழுப்பியதோடு,  புதியவர்கள் நிறையபேர் வந்திருக்காங்க. அவர்களை குறைவாயும் எடைபோட்டுவிடக்கூடாது. ரொம்ப எதிர்பார்க்கவும் கூடாது.

நீங்கதான ஓட்டு போட்டீங்க, என்ன நடக்குதுன்னு நீங்கதான் கவனிக்கணும். நாங்களும் கண்காணிக்கிறோம் என்றார்.

திராவிட கட்சிகள் இல்லாத ஒரு புதிய ஆட்சி வந்திருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தன்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசும் ஒருவர் கட்சித் தொடங்கினால்  அது பேரு திராவிடகட்சிதான் எனத் தெரிவித்தார்.

கமல்ஹாசன் முதலமைச்சரானால்தான்  பொறாமைப்படுவேன் என ரஜினி கூறியது தொடர்பான கேள்விக்கு,  அவர் சிரிப்போடுதான் சொல்வாரே தவிர,  நாங்கள் இரண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் பொறாமைப்பட்டது கிடையாது, போட்டிதான் போடுவோம் என்றார். சினிமா மட்டுமில்லை, கிரிக்கெட்டில் இருந்தாலும் நாங்கள் போட்டிபோட்டுதான் விளையாடுவோம் என பதில் அளித்தார்.

அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளை செய்தியாளர்களைப் போல் தானும் வேடிக்கைப் பார்ப்பதாகவும் கமல்ஹாசான் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version