இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகிய விதம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், “விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவரின் வயதை வைத்து மதிப்பிட முடியாது. விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம், ஆக்ரோஷம், அர்ப்பணிப்பு மற்றும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் ஆகியவற்றால் அவர் இன்னும் தனித்துவமான வீரராக திகழ்கிறார்” என்றார்.

மேலும், “டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் விராட் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பு செய்த அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அரச மரியாதையுடன் கூடிய பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், விராட் கோலி போன்ற வீரர்கள் தங்களது எதிர்காலம் குறித்து தாங்களே முடிவு எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். “சச்சின் டெண்டுல்கர் போலவே விராட் கோலியும் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். இந்தியா கண்ட சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். ஐசிசி கோப்பை மட்டுமே அவரது கேப்டன்சி சாதனையில் குறைவாக உள்ளது” என ஸ்ரீகாந்த் பாராட்டினார்.

ரோகித் சர்மா குறித்து பேசிய அவர், “டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது அவரது முடிவு. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் இன்னும் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் தொடர்ந்து ரன்கள் குவித்து, உடல்தகுதியை தக்கவைத்துக் கொண்டால், 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக நிச்சயமாக விளையாட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஸ்ரீகாந்தின் இந்த கருத்துகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளன. குறிப்பாக விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version