பேசாத ஒன்றைப் பேசியதாகப் பொய் வழக்குப் போட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையை ஏவிக் கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்து செய்த – இந்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை அச்சுறுத்த முடியாது எனவும் திமுகக் கூறியுள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது…

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை த.வெ.க. அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம்! மிக மோசமான ஜனநாயகப் படுகொலை!!

முதலமைச்சர் விஜய் தனது “Apprentice” ஆட்சியில் சரியும் சட்ட ஒழுங்கு, மாநிலம் முழுவதும் மக்களை வாட்டும் மின்கட்டணப் புகார்கள், விவரம் இல்லாத அமைச்சர்கள் அடிக்கும் கூத்துகள், “இம்” என்றால் சிறைவாசம் என்ற ஆணவத்தைப் பிரதிபலிக்கும் அடக்குமுறைகள், பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க. நிர்வாகிகள்,

எல்லாவற்றுக்கும் மேல் டெல்டா விவசாயிகள் கண்ணீர் சிந்த வைக்கும் காவிரிப் பிரச்சினையில் முதலமைச்சரின் மவுனமும் மெத்தனமும் என எதிர்க்கட்சித் தலைவர் நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ள கேள்விகளுக்கு இன்றே அஞ்சி நடுங்கி, தஞ்சாவூரில் பேசாத ஒன்றைப் பேசியதாகப் புனைந்து, கற்பனைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் ஒன்றைப் போட்டு, உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது அடாவடி தவெக அரசு!

கொடுங்கோல் ஆட்சியின் அலங்கோலத்தினை அரங்கேற்ற இந்த அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பாசிசத்தின் உச்சகட்டமாக எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைப் பொய் வழக்கில் கைது செய்துள்ள முதலமைச்சர் விஜய் இப்போது நடத்தி வருவது தி.மு.க. கூட்டணியிடம் இருந்து கடன் வாங்கிய கட்சிகளுடன் ஆதரவிலான ஆட்சி என்பதை ஏனோ “அதிகார போதையில்” மறந்து, மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் விஜய் இப்படியெல்லாம் தி.மு.க.வையும் மிரட்ட முடியாது. எங்கள் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும் அச்சுறுத்த முடியாது.

நாங்கள் இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம்! சட்டப்பேரவையில் பதில் சொல்லாவிட்டாலும் மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version