நடிகை த்ரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டேன். அது மிகவும் தரக்குறைவானது, மலிவானது மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. அவர் பின்பற்ற விரும்பும் அரசியல் கலாச்சாரத்தை அதுவே பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்படிப்பட்ட மனநிலையுடன் அரசியல் கட்சியை வழிநடத்தவும், ஒருநாள் மாநிலத்தை ஆளவும் நினைப்பவர்கள் இருந்தால், கடவுள்தான் மக்களை காப்பாற்ற வேண்டும். பெண்களை இழிவுபடுத்தி, அவமதித்து பேசுவதை அரசியல் நாடகமாக மாற்றி, அதற்கு கைதட்டல் மற்றும் ஆரவாரம் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் கூறியுள்ளார்.
“பெண்களின் கண்ணியத்தை அரசியல் லாபத்திற்காக பலிகடாவாக்கத் தொடங்கினால், எந்தக் குடும்பமும் அதிலிருந்து விலகி இருக்க முடியாது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொது உரையாடலுக்கு எல்லைகள் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்; அவர்கள் அரசியல் விளையாட்டின் கருவியாக பயன்படுத்தப்படக் கூடாது” என்றும் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், “எதிரணியின் செயல்திறன், பார்வை மற்றும் தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுக்க முடியாதபோது, தனிப்பட்ட தாக்குதல்களும் ஆபாசமான வார்த்தைகளும் எளிய வழியாக மாறுகின்றன. உதயநிதி ஸ்டாலினும், அவரது தந்தை மு.க.ஸ்டாலினும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் அதையே பொது வாழ்க்கையின் தரமாக மாற்றக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, “நடிகை திரிஷாவை பொதுமேடையில் இழிவுபடுத்தியதற்காக உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் துணிச்சலும் நாகரிகமும் அவருக்கு உள்ளதா என்பதை பார்க்கலாம்” என்று குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
குஷ்புவின் இந்தப் பதிவுக்கு அவதூறான வகையில் பதிவிட்டுள்ள ஒரு பதிவருக்கு குஷ்பு தனது மற்றொரு பதிவில் பதில் அளித்துள்ளார். அந்தப் பதிலில், “நீங்கள் பேசும் மொழியைத்தான் புரிந்துகொள்கிறீர்கள் என்றால், பெண்களும் அதே மொழியில்தான் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகிறது. உங்கள் தாயை ‘ஐட்டம் பீஸ்’ என்று நான் அழைத்தால் நீங்கள் சிரித்துக்கொண்டு ‘நன்றி’ சொல்வீர்கள் என நினைக்கிறேன். அப்படியென்றால் நான் அப்படி அழைக்கலாமா?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
