தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளுக்குப் பிறகு கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு மூன்றாவதாக முதலமைச்சர் விஜய் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

மிகவும் பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில், ஆன்மிக ரீதியாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்குத் தமிழக முதலமைச்சர்கள் செல்வது ஒரு நீண்டகாலப் பாரம்பரியமாக இருந்து வருகிறது. தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளனர்.

தனது திரைப்பயணம் மற்றும் அரசியல் பயண காலகட்டங்களில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள ஆற்றல் வேண்டியும், உடல் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ய கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்  சென்றுள்ளார். அப்போது, ஒரு கிலோ எடையில் இரண்டரை அடி நீளமுள்ள தங்க வாள் ஒன்றை எம்ஜிஆர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
அந்த வகையில், தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 11) கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்புப் பூஜை செய்து அம்மனை வழிபட்டுள்ளார். அப்போது, வெள்ளி வாளை கோயிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் மிக முக்கியமான ஆன்மிகப் பயணம் இதுவாகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version