அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய கடல் வழியாக விளங்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ உடனடியாக திறக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பல வாரங்களாக நிலவி வந்த மோதலால் இந்த வழித்தடம் மூடப்பட்டு சர்வதேச கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரானுடனான நமது உறவு முந்தைய காலங்களை விட இப்போது மிகவும் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. அவர்கள் இனி அணு ஆயுதங்களை விரும்பவில்லை, அதைப் பெறவும் மாட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப் பேசிய டிரம்ப், “நிலைமை முழுமையாக சீரடைந்தவுடன், அங்குள்ள அணுசக்தி கழிவுகளை அமெரிக்கா கைப்பற்றி அழிக்கும்,” எனத் தெரிவித்தார். மேலும், “இந்த அமைதி பேச்சுவார்த்தைகள் விரைவாகவும் சீராகவும் நடக்கும் என நம்புகிறேன். ஒருவேளை இதில் எதுவும் சரியாக வரவில்லை என்றால், எங்களிடம் ‘இறுதியான மாற்றுத் திட்டமும் தயாராக உள்ளது; ஆனால், அதை பயன்படுத்தும் நிலை ஒருபோதும் வராது என நம்புகிறேன்,” என்று எச்சரிக்கை கலந்த தொனியில் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்று வரும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. எனினும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் சரியான நேரம் குறித்து ஈரான் தரப்பில் இன்னும் சில ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
