கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ளது கே.ஆர்.பி அணை. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் மாவட்டத்தில் உள்ள 16 ஊராட்சிகளில் இரு போக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த கே.ஆர்.பி அணையால் மாவட்டத்தில் நேரடியாக 9,012 ஏக்கரும், மறைமுகமாக 10,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், தமிழக முதல்வர் உத்தரவின்படி கே.ஆர்.பி அணையின் வலது புற கால்வாய் மூலம் 75 கனஅடியும், இடது புற கால்வாய் மூலம் 76 கனஅடியும் என 151 கனஅடி நீரை முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசன் ஆகியோர் கால்வாயில் மலர் தூவி வரவேற்றனர்.
மேலும் இன்று முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரின் மூலம் பெரியமுத்தூர், தளிஅள்ளி, சுண்டேகுப்பம், கால்வேஹள்ளி, காவேரிப்பட்டினம், மிட்டள்ளி, பையூர், பாலேகுளி உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். விவசாயிகள் இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற உள்ளது.
மேலும் விவசாயிகள் இந்த நீர் பங்கீட்டை உரிய நேரத்தில் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
