அனைத்து மாநகராட்சிகளிலும் 100 சதவீத குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களுடன் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யு.சி.எப். திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்பாட்டு முன்னேற்றம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநிலத்தின் 25 மாநகராட்சிகளிலும் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் குடிநீர் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, தினசரி குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்த இலக்கு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சென்னையின் முக்கிய நீர்வழித்தடங்களான அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு பணிகளுடன் இணைந்து கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புப் பணிகளையும் வேகப்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அனைத்து மாநகராட்சிகளிலும் 100 சதவீத குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை வழங்கும் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நவீன பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். வெள்ள பாதிப்புகளை குறைத்து மழைநீரை சேமிக்கும் வகையில் “ஸ்பாஞ்ச் பூங்காக்கள்” அமைப்பதற்கான திட்டங்களையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version