பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் பல ஆண்டுளாக தேங்கியுள்ள 95.81 லட்சம் டன் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தேங்கி இருக்கும் குப்பைக் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் அவற்றை அகற்றுவதில் உள்ள பிரச்சனை குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கு விசாரித்தது.
பெருங்குடி, கொடுங்கயூரில் தேங்கியுள்ள 95.81 லட்சம் டன் கழிவுகளை கையாள்வது குறித்தோ, அதை அகற்ற தேவையான கால அளவு குறித்தோ சென்னை மாநகராட்சியிடம் உறுதியான செயல்திட்டங்கள் எதுவும் இல்லை என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 29,28,398 மெட்ரிக் டன்கள் கழிவுகள், கொடுங்கையூரில் 66,52,506 டன் கழிவுகள் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே சென்னை பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் பல ஆண்டுளாக தேங்கியுள்ள குப்பைகளை எப்படி அகற்றுவது, எவ்வளவு கால கெடுவுக்குள் அகற்றுவது உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து வரும் 29ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
