முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று, செம்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசும் திமுகவும் அதன் கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளன. ஒரு தமிழறிஞராகவும், படைப்பாளராகவும், இதழாசிரியராகவும் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் அதிகம். ஆனால், அவரது பிறந்த நாளைச் செம்மொழி நாள் என்று திமுக அரசு அறிவித்த காரணம் என்ன? செம்மொழி வரலாற்றின் செப்பேடுகளில் கருணாநிதி மட்டுமா பங்களித்தார்?
மொழி எப்போது செம்மொழி ஆகிறது?
ஒரு மொழி நீண்ட வரலாற்றையும், இலக்கியச் செறிவும் கலைப்படைப்புகளில் வளமும் கொண்டிருக்கும்போது அதைச் செம்மொழி என்று அறிவிக்கிறார்கள். உலகில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்ட 21 மொழிகளில் 11 மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளன. இதனால் செம்மொழித் தகுதி என்பது பொதுவாகவே வழக்கொழிந்த மொழிகளுக்குக் கொடுக்கப்பட்ட இறுதி உயர் மரியாதையாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதும் புழக்கத்தில் உள்ள தமிழ் மொழி, 3000 ஆண்டு கால வரலாற்றையும் செழுமையான இலக்கியத் தரவுகளும், கலைப் படைப்புகளையும் கொண்டிருக்கிறது. இதுவே செம்மொழிகளின் பட்டியலில் தமிழை முதன்மை ஆக்குகிறது.
தமிழ் வெறும் செம்மொழியா?
கிரேக்கம், எகிப்து, எபிரேயம், சுமேரிய மொழி, பண்டைய சீனம், பண்டைய லத்தின் எனப் பல்வேறு மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி உண்டு. ஆனால் தமிழ் வெறும் செம்மொழி மட்டுமல்ல, அது 11 சிறப்புத் தகுதிகளைக் கொண்ட உயர்தனிச் செம்மொழி என்று 1902-ம் ஆண்டு வெளியான கட்டுரை ஒன்று மிக வலுவான சான்றுகளைக் கொண்டு நிறுவியது. அதென்ன உயர்தனிச் செம்மொழி? என்றால், இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் சமஸ்கிருத மொழிக் குடும்பத்தின் சுவடுகள் இல்லாதது தமிழ். அது, திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாகப் பல மொழிகளுக்கு வேர்ச்சொற்களை வழங்கியிருக்கிறது. மேலும், அது மட்டுமன்றி, மற்ற மொழிகளின் கலப்பு இல்லாமல் முற்றிலும் தனித்து இயங்க முடியும் அளவு கலைச் சொற்களை உருவாக்கிக் கொள்ளும் வலுவான சொல்லாக்கக் கட்டுமானம் தமிழில் இருக்கிறது. இதனால்தான் தமிழ் உயர்தனிச் செம்மொழி ஆகிறது என அந்தக் கட்டுரை ஆசிரியர் விளக்கினார். அவர்தான், தமிழை முதன்முதலில் செம்மொழி என அழைத்த பரிதிமாற்கலைஞர். இவரது ஆய்வுக்கு ஆங்கிலேய மொழியியல் அறிஞர் கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூல் அடித்தளம் அமைத்தது.
செம்மொழி அறிவிப்புத் தீர்மானங்கள்
பரிதிமாற்கலைஞரின் ஆய்வும் அறிவிப்பும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழை அதிகாரப்பூர்வமாகச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 1918-ல் இதன் முதல் தீர்மானம் சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜம் தலைமையில் பல அமைப்புகள் சேர்ந்து நிறைவேற்றின. 1919-ம் ஆண்டிலிருந்து தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கம் செம்மொழி அறிவிப்பு நிகழப் பல தீர்மானங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வந்தது. 2003, 2004-ம் ஆண்டுகளில் பேரணி, கையெழுத்து இயக்கம் எனக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடர்க் குரல் பல தமிழ்ச்சங்கங்களையும் ஈர்த்தது. தலைநகர்த் தமிழ்ச்சங்கம், தில்லித் தமிழ்ச்சங்கம், பெங்களூரு, திருவனந்தபுரம், மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தொடர்ந்து தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று போராடின. 203 ஆகஸ்ட் 18 அன்று தில்லி தமிழ் அமைப்புகள் இதற்காக உண்ணாவிரத போராட்டம் செய்தது.
1935-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், 66-ல் உலகின் முதன்மை உயர்தனிச் செம்மொழி என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி வெளியிட்ட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், 51-ல் சாகித்ய அகாதெமி உருவாக்க மாநாட்டில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆஸாத், உள்ளும் புறமும் என்ற நூலை எழுதிய மணவை முஸ்தபா, தமிழ்ச் செம்மொழி கோரிக்கை வரைவு அறிக்கை தயாரித்த மொழியியல் அறிஞர் சி.ஜான் சாமுவேல், 2004-ம் ஆண்டு தமிழ் ஏன் செம்மொழி என்று விளக்கி எழுதிய அமெரிக்கத் தமிழறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் போன்ற எண்ணற்ற தமிழார்வலர்கள் தமிழின் செம்மொழித் தகுதி அறிவிப்புக்கான குரலை உரக்கப் பதிவு செய்திருக்கின்றனர்.
கருணாநிதி என்ன செய்தார்?
தமிழைச் செம்மொழி ஆக்கும் கோரிக்கைகள் நூற்றாண்டு காலமாக எழுந்து வந்தாலும் உடனே அப்படி அறிவித்து விடுவதில் சிக்கல் இருந்தது. இந்தியாவின் மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டதால், ஒரு மொழியை மட்டும் செம்மொழி என அறிவிப்பதை மத்திய அரசு ஏற்க மறுத்தது. “செத்துப்போன மொழிகளுக்குத்தான் செம்மொழித் தகுதி கொடுப்பார்கள்” எனச் சப்பைக்கட்டு கட்டியது. ஆனால், 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு முன்னதாக 2003-ம் ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் எல்லாம் திமுக சார்பில் தமிழ்ச் செம்மொழி ஆட்சி மொழி என்ற தலைப்பில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. மேலும் 2000-ம் ஆண்டு அமெரிக்கத் தமிழறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதிய கட்டுரையும் பின்பலம் சேர்த்தது. இவற்றின் துணையுடன் கருணாநிதி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இந்தியாவின் முதல் செம்மொழி தமிழ்
கருணாநிதியின் தொடர் வலியுறுத்தலின்பேரில், காங்கிரஸ் அரசும் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க ஒப்புக் கொண்டது. ஆனால், தமிழுடன் சேர்ந்து மேலும் சில மொழிகள் விரைவில் செம்மொழித் தகுதி உடையதாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது. அதன்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் முதலாவதாக அறிவிக்கப்பட்ட செம்மொழி தமிழ்தான். இதையடுத்து 2004-ம் ஆண்டு ஜூன் 07-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து அக்டோபர் 12-ம் தேதி செம்மொழியாக அறிவிக்கப்பட்டு அறிக்கை வெளியானது.
பிரம்மாண்ட செம்மொழி மாநாடு
இதையடுத்து 2008-ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் செம்மொழி தமிழாய்வு மைய நிறுவனத்தைக் கருணாநிதி உருவாக்கி, தமிழ் ஆராய்ச்சிகளுக்கு இடம் அமைத்தார். அவற்றின் மூலம் 8 செம்மொழி மாநாடுகள் நடத்தப்பட்டன. 2010-ம் ஆண்டு 9-வது செம்மொழி மாநாட்டை, முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாகத் தமிழக அரசே நடத்தியது. கோவையில் ஜூன் 27-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றன. அதில் செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள் என்ற நூலை வெளியிட்டுத் தமிழ்ச் செம்மொழி வரலாற்றைப் பொன்னெழுத்துகளால் பொறித்தார். கணினிகளில் தமிழ் ஏற இணையத்தமிழ் மாநாட்டை நடத்தினார். அதே ஆண்டு நவம்பர் மாதம் அண்ணா மேம்பாலம் அருகே செம்மொழிப் பூங்காவையும் கருணாநிதி திறந்து வைத்தார். இன்றும் அப்பூங்காவின் பெயர், அவரது கையெழுத்திலேயே செம்மொழி என்ற பெயரைக் கம்பீரமாகத் தாங்கி நிற்கிறது.
-விவேக்பாரதி