காவிரி விவகாரத்தில் அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபட வேண்டுமென்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுவையும் பாதித்து – சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் உள்ளனர் காவிரி டெல்டா விவசாயிகள். உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து வருவது, காவிரி டெல்டா விவசாயிகளைப் பேரிடரில் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 28.3 டி.எம்.சி காவிரி நீரில் இதுவரை 3.4 டி.எம்.சி மட்டுமே திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதியும் திறக்க இயலவில்லை.
ஜூன் 23 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அணைகளில் உள்ள நீரைக் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள், என்று ஆணையம் அறிவுறுத்தி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறப்பது குறித்த முடிவை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இப்போது ஜூலை 22-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும், குடிநீர்த் தேவைக்கு மட்டுமே நீரைப் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறப்பது பற்றிய முடிவினை ஜூலை 28-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
இரு கூட்டங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து- காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு கூட்டம், இரு கூட்டம் என்று இப்போது மீண்டும் 28.7.2026 அன்று மூன்றாவது கூட்டம் என்ற நிலையிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள அவசர நியாயத்தை ஆணையம் உணர மறுப்பது தெளிவாகிறது.
ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு. மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கவும் நடுவர் மன்றமும் அமைக்க சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியும், அந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் நேரமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர். இப்போது தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை விட வேறு என்ன பிரச்சினையில் இந்த அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது? மாநிலத்தின் காவிரி உரிமையை நிலைநாட்ட ஏன் இவ்வளவு பயம்?
காவிரி நீரைப் பெறத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் அதேவேளையில், விவசாயிகளுக்கு உடனடியாக “புதிய நிவாரணத் தொகுப்பினை”யும் அறிவித்து, விவசாயப் பெருங்குடி மக்களை இப்பேரிடரிலிருந்து காப்பாற்றிட முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
