முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமின் மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாகத் தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர், அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையிலடைக்கப்பட்ட மார்க்கண்டேயன் தரப்பில் ஜாமின் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, மார்க்கண்டேயனின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மார்க்கண்டேயன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. எந்த ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மனுதாரர் பேசவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அடுத்து விசாரணையை இன்று (ஜூலை 28) தள்ளிவைத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதன்படி மார்க்கண்டேயன் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version