கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ்- ஸ்பெயின் அணிகள் இன்று நள்ளிரவு மோத உள்ளன.
அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இப்போட்டி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் தற்போதே உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் பிரான்ஸ் அணி அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. விளையாடிய 6 போட்டிகளிலும் முழுமையான வெற்றிகளைப் பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் பலத்த போராட்டத்திற்குப் பின் மொராக்கோ அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்களது இடத்தை உறுதி செய்தது. கிலியான் எம்பாப்பே தலைமையிலான பலமான தாக்குதல் ஆட்டமும், வில்லியம் சலிபா தலைமையிலான அசைக்க முடியாத பலத்த தடுப்பாட்டமும் பிரான்ஸின் பலமாகப் பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், ‘லா ரோஜா’ என்று அழைக்கப்படும் ஸ்பெயின் அணி காலிறுதியில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி 2010-க்குப் பிறகு முதல் முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்து ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் மிக்கெல் மெரினோ அடித்த விறுவிறுப்பான கோல் ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. லமினே யமல், பெட்ரி, ரோட்ரி ஆகியோரின் அற்புதமான பந்து கட்டுப்பாடும் பாஸிங் திறனும் ஸ்பெயினின் தூண்களாக உள்ளன.
இப்போட்டியில் அனைவரது பார்வையும் பிரான்ஸின் சூப்பர் ஸ்டார் கிலியான் எம்பாப்பே மற்றும் ஸ்பெயினின் இளம் புயல் லமினே யமல் ஆகிய இருவர் மீதே உள்ளது. கடந்த யூரோ 2024 அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியிருந்தது. அதற்குப் பழிதீர்க்கும் முனைப்பில் பிரான்சும், தங்களது ஆதிக்கத்தைத் தொடரும் முனைப்பில் ஸ்பெயினும் களமிறங்குவதால் இந்த ஆட்டம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய நேரப்படி, இப்போட்டி ஜூலை 15 புதன்கிழமை நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற உள்ளது.
