மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பவே மின்சாரத்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று (ஜூன் 25) வெளியிட்டார். அதில், முந்திய திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் நிர்வாக முறைகேடு, நிதி மேலாண்மையில் நிகழ்ந்த தவறுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அமைச்சர் தெரிவித்தார். இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் நிர்மல்குமாரின் வெள்ளை அறிக்கை குறித்து விளக்கமளித்து, மறுப்பு தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பவே மின்சாரத்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், மின்வாரியத்தில் செலவு உயர்ந்ததற்கான காரணம் வெள்ளை அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திமுக ஆட்சியில் புதிய மின்திட்டங்கள் தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்த போது மின்வாரியத்தின் கடன் சுமை ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்ததாகவும், மின் உற்பத்தியை அதிகரிக்க திமுக ஆட்சியில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் கடன் 9.5%-க்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் மின்வாரியத்தின் வருவாய் அதிகரித்ததாக குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்த போதிலும், திமுக ஆட்சியில் தடையில்லாமல் மின்விநியோகம் செய்யப்பட்டது. திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றம்சாட்டிய செந்தில் பாலாஜி, மின்வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட போது, தேர்தல் வந்ததால், அப்போது வழங்க முடியாததையடுத்து, தற்போது தவெக அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக ஆட்சி அமைந்த 40 நாட்களுக்குள் 401 பேருக்கு பணி நியமனம் செய்ய முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவித்த செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டும், வருவாய் பற்றாக்குறை ரூ.58,000 கோடியாக இருந்ததாகவும், திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.34,000 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வட்டியாக மின்வாரியம் செலுத்தியது நிலையில், அது, திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக வட்டி கட்டவில்லை என்றார்.

