தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்கும், ஓட்டப்பிடாரம் வட்டம் ஓசனூத்தைச் சேர்ந்தர் சுரேஷ் என்பவருக்கும், கடந்த மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இருவரும் மாலை கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
பின்னர், மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு சென்ற தம்பதியினர், கையில் வைத்திருந்த பழங்களை குரங்குகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஏராளமான குரங்குகள் சூழ்ந்ததால் பயந்துபோன அனிதா, நிலைதடுமாறி மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற கழுகுமலை தீயணைப்பு மீட்புப் படையினர், போலீசாருடன் இணைந்து அனிதாவின் உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
