எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் சேர போலி சான்றிதழ் கொடுத்தால்
பெற்றோர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு தவறான மதிப்பெண் பட்டியல் , தவறான சாதி சான்றிதழ், தவறான பிறப்புச் சான்றிதழ் மற்றும் போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கினால் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்காெள்ளப்படும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 2024-25 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையின் போது என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் போலி ஆணவங்களை அளித்ததை கண்டுபிடித்தனர். அதேபாேல் தவறான சான்றிதழ்களை அளித்தும் மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதற்கு முயற்சி செய்ததையும் கண்டுபிடித்தனர். அப்போது அவர்களிடம் மருத்துவக்கல்வி மாணவர் சேரக்கை குழுவின் விசாரணை நடத்தியப் போது, அந்த தவறுகளை தாங்கள் செய்யவில்லை எனவும், பதிவு செய்த இடத்தில் செய்துள்ளதாகவும், சிலர் முகவர்கள் மூலம் விண்ணப்பம் செய்தோம். அவர்கள் தவறான தகவல்களை அளித்திருக்கலாம் எனவும் கூறினர். தவறான தகவல் அளித்து இடங்களை தேர்வு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. மேலும் தகவல் கையேட்டில் தவறு செய்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் இல்லாமல் இருக்கிறது என கூறி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு 2025-26ம் கல்வியாண்டிற்கு வெளியிட்டுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான தகவல் கையேட்டில், மாணவர்கள் விண்ணப்பத்தை www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ஜூன் 6 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இறுதித் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர் எனப்படும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கும் யார் யாருக்கு பொருந்தும் என்பதையும் தெளிவாக அளித்துள்ளனர். மேலும் விண்ணப்பத்துடன் , நீட் 2025 ஹால்டிக்கெட், 10,11,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்தையும் மாணவர்கள் கவனமாக நிரப்ப வேண்டும். விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள நீட்தேர்வு மதிப்பெண்கள் உட்பட அனைத்து தகவல்களும் உண்மை மற்றும் சரியானவை என்பதை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தை முறையாக ஆய்வு செய்த பிறகு, விண்ணப்பத்தில் மாணவர்கள் வழங்கிய மதிப்பெண்கள் சரியாக இல்லாவிட்டால் அல்லது வேறு ஏதேனும் தகவல் தவறாகக் கண்டறியப்பட்டால், மாணவர்கள் சேர்க்கையை இழப்பார் .
படிப்பில் எந்த வருடத்தில் இருந்தாலும், அந்த நேரத்தில் மாணவர் சேர்க்கை ரத்துச் செய்யப்படும்.
மேலும் மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்தப் பாடத்தையும் தொடர தடை விதிக்கப்படுவார்கள்;
தவறான மதிப்பெண் பட்டியல் , தவறான சாதி சான்றிதழ் , தவறான பிறப்புச் சான்றிதழ் மற்றும் போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கியதற்காக மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர், பாதுகாவலர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன். குற்றவியல் நடவடிக்கை தொடங்கப்படும்.
MBBS , BDS படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 11 ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்டாலும், தற்காலிக சேர்க்கை தானாகவே ரத்து செய்யப்படும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் மற்றும் பெற்றோர் , பாதுகாவலர் வேட்பாளர் தகுதி அளவுகோல்களை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களும், பெற்றோார்களும் கவனமாகப் படித்து, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பது தொடர்பான அனைத்து வழிமுறைகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தைத் தவிர வேறு எந்தப் படிவமும் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது உள்ளிட்ட வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர்.
