ந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கைப் பொருட்கள் கடந்த 4 ஆண்டுகளில் 1.27 கோடிக்கும் அதிகமானவை திருடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 69 ரயில்வே பிரிவுகளில் 54 பிரிவுகள் அளித்த தகவல்களின்படி, பெட்ஷீட், டவல், போர்வை, தலையணை, தலையணை உறை உள்ளிட்ட 1.27 கோடி பொருட்கள் காணாமல் போயுள்ளன. 2022-ஐ ஒப்பிடும்போது 2025-ல் இந்தத் திருட்டு 56% அதிகரித்துள்ளது.

திருடப்பட்ட பொருட்களில் முகம் துடைக்கும் டவல்கள் 46.54 லட்சம் என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளன. தொடர்ந்து பெட்ஷீட்கள் 41.13 லட்சம், தலையணை உறைகள் 23.59 லட்சம், போர்வைகள் 12.95 லட்சம், தலையணைகள் 2.76 லட்சம் திருடப்பட்டுள்ளன.

இந்தத் திருட்டால் படுக்கைப் பொருட்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு சுமார் ₹104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பின் பெரும்பகுதி, தினக்கூலியாக பணிபுரியும் ஏசி கோச் அட்டெண்டர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராஜஸ்தானின் பிகானேர் ரயில்வே பிரிவில் மட்டும் 25.76 லட்சம் பொருட்கள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக ராஞ்சி (9.31 லட்சம்), டெல்லி (8.21 லட்சம்), மும்பை (8.17 லட்சம்) ஆகிய பிரிவுகள் உள்ளன. அதேசமயம், திருச்சிராப்பள்ளி மற்றும் பாலக்காடு ரயில்வே பிரிவுகளில் எந்தப் படுக்கைப் பொருளும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சினையைத் தடுக்க CCTV கண்காணிப்பு, Coach Mitra செயலி, ஒவ்வொரு ஏசி பெட்டிக்கும் தனி அட்டெண்டர் நியமனம், பயணிகள் இறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் படுக்கைப் பொருட்களை ஒப்படைக்க அறிவுறுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version