மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாக, அங்கு வசித்து வந்த இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை சுமார் 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்துள்ளன.
வணிக ரீதியிலான விமானங்கள் மட்டுமின்றி, தேவைப்படும் இடங்களில் சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். போர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்துள்ளன.
இந்தியர்களின் பாதுகாப்பிற்குத் தங்களின் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எஞ்சியுள்ள இந்தியர்களையும் தாயகம் அழைத்து வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
