இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக ‍நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் இன்று பிற்பகல் மூன்று முப்பத்தைந்து மணிக்கு இந்திய ராணுவ அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பேசியதாகவும், இதன‍ை அடுத்து இருதரப்பிலும் மாலை ஐந்து மணி முதல் சண்டையை நிறுத்திக்கொள்வது என ஒப்புக்‍கொண்டுள்ளதாகவும் கூறினார்.

வான், தரை மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் மாலை ஐந்து மணி முதல் சண்டை நிறுத்தம் செய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்திற்கு அமெரிக்கா விடியவிடிய முயற்சி மேற்கொண்டதகாவும், சண்டை நிறுத்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், இந்தியாவும் – பாகிஸ்தானும் முழுமையான சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், சண்டை நிறுத்தத்திற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான சமரசமற்ற இந்தியாவின் நிலைப்பாடு தொடரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version