ஆந்திராவில் இருந்து தேனிக்கு இருசக்கர வாகனத்தில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1200 கிலோமீட்டர் தூரம் உள்ள விசாகப்பட்டினத்திற்கு இருசக்கர வாகனத்திலேயே சென்று கஞ்சா வாங்கி வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்திற்கு (1200 கிலோ மீட்டர்) இருசக்கர வாகனத்திலேயே சென்று ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ 364 கிராம் கஞ்சாவை கடத்தி வந்த தேவாரம் சாலைத்தெருவைச் சேர்ந்த டிரைவர் பாலமுருகன் (32) கோம்பை ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் ஈஸ்வரன் (40) ஆகிய இருவரை தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இப்பிரிவின் தேனி இன்ஸ்பெக்டர் பாக்கியம், எஸ்.ஐ. அருண் தலைமையிலான போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் உப்புக்கோட்டை -டொம்புச்சேரி ரோடு கண்மாய் அருகே கடந்த செப் 17 இரவு ரோந்து சென்றனர். அப்போது பாலமுருகன் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வர, பின்இருக்கையில் ஈஸ்வரன் என்பவர் அமர்ந்திருந்தார்.
அவர்களிடம் இருந்த ஒரு பையில் 8 கிலோ 141 கிராம் கஞ்சாவை 4 பொட்டலங்களாக வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பையில் 6 கிலோ 223 கிராம் கஞ்சா 3 பொட்டலங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் ஏழு பொட்டலங்களில் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ 364 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 அலைபேசிகள், ஒரு டூவீலரை போலீசார் கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனர்.
இந்த இருவரும் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தேனி வந்துள்ளனர்.கைதான பாலமுருகன் மீது ஆண்டிபட்டி போலீசில் மோசடி வழக்கு பதிவாகி, அந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். கைதான ஈஸ்வரன் மீது வீரபாண்டி போலீசில் வழக்குப் பதிவாகி நிலுவையில் உள்ளது. சமீப காலமாக ஆந்திரா மற்றும் ஒரிசாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.