கேரளவில் நிலத்தகராறில் தம்பதியை எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரீடம் நகரை சேர்ந்தவர்கள் கிறிஸ்டோபர்-மேரி தம்பதி. இவர்களுக்கும், வீட்டருகே வசிக்கும் வில்லியம்ஸ்-க்கும் இடையே நிலப்பிரச்னை இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு 9.30மணியளவில் கிறிஸ்டோபரும், அவரது மனைவி மேரியும் அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய வில்லியம்ஸ், கையில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை தம்பதி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

தீ பற்றி எரிந்ததில் இருவரும் அலறி துடிக்க, அக்கம்பகத்தினர் இருவரையும் மீட்டனர். மேலும் படுகாயமடைந்த இருவரும் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 60சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்களுடன் தம்பதி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த எர்ணாகுளம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தம்பதியை எரித்துக் கொலை செய்ய முயன்ற வில்லியம்ஸை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு வில்லியம்ஸ் தனது அறையில் தூக்கிட்டப் படி சடலமாக கிடந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட வில்லியம்ஸ் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version