மாணவர்கள் போராட்டத்தை முடக்குவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மெட்ரோ நிலையங்கள், சாலைகள், கடைகள், இணையம் மற்றும் உணவு கிடைப்பதை அரசு முடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மெட்ரோவை மூடுங்கள், சாலைகளை மூடுங்கள், கடைகளை மூடுங்கள், இன்டர்நெட்டை மூடுங்கள், உணவைக்கூடத் தடுத்து நிறுத்துங்கள். உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மீது இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்; ஆனால், மோடி அவர்களே, உங்களால் தடுத்து நிறுத்த முடியாத ஒரே விஷயம் வினாத்தாள் கசிவு மட்டும்தான்” என்று விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில், நீட் வினாத்தாள் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் போராடும் சி.ஜே.பி அமைப்புக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) மாலையில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கை என்றும், அது குறித்து அரசாங்கம் சம்மதிக்கவில்லை என்றால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என்றும் சி.ஜே.பி பேச்சாளர் அசுதோஷ் ரங்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது ஆகிய கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சரின் ராஜினாமா விவகாரம் மட்டுமே தற்போதைய பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய தடையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version