வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு: ஓராண்டுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளை மூடுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இத்தகைய கணக்குகள் மூலமாகவே அதிகப்படியான சைபர் மோசடிகள் நடைபெறுவதாக வங்கி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் தேவை முடிந்த பிறகு வங்கிக் கணக்குகளைத் தொடராமல் விடுவதால், அந்த கணக்குகள் மோசடி நபர்களின் இலக்காக மாறுகின்றன. இதனால் நிதி இழப்பு மற்றும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செயல்படாமல் உள்ள வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், உடனடியாக தங்கள் கிளைக்குச் சென்று KYC (Know Your Customer) ஆவணங்களைச் சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லையெனில், அத்தகைய கணக்குகளை நிரந்தரமாக மூடுவது பாதுகாப்பானது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உங்கள் வங்கிக் கணக்கில் நீண்ட நாட்களாகப் பணப் பரிமாற்றம் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட வங்கி உங்களைத் தொடர்பு கொள்வதற்கு முன்பே நீங்களாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்பது, தேவையற்ற அபராதங்கள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளிலிருந்து தப்பிக்க உதவும்.
