கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர் மழையால் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்; மேலும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் நிலச்சரிவு காரணமாக தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 27 வீடுகள் முழுமையாகவும், 196 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்காக 5,792 பேர் மீட்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 209 நிவாரண முகாம்களில் பத்திரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை சற்று குறைந்தாலும், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் வி.டி. சதீஷன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வெள்ளம் மற்றும் நீர் தேங்கிய பகுதிகளில் துப்புரவுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அணில்குமார் தெரிவித்துள்ளார்.
கனமழையின் காரணமாக சனிக்கிழமையன்று மாநிலத்தின் பல பகுதிகளில் 320 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா பகுதிகளில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பப் படை (NDRF) கூடுதல் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, திருவனந்தபுரம், பாலக்காடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சிறப்புத் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று ‘ஆரஞ்சு அலெட்’ எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் மூலம் அப்பகுதிகளில் 115 மி.மீ முதல் 204 மி.மீ வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் மருத்துவத்துறையினர் முழு எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளிதரன் உறுதியளித்துள்ளார்.
மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதேவேளையில், பொன்னானியில் நடைபெற்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் வி.டி. சதீஷன் பங்கேற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நேரத்தில் முதல்வர் விருந்து சாப்பிடுவது சரியா என சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன.
