இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில், தடைசெய்யப்பட்ட வேதிப்பொருள் கலந்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை நடத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரும்பாலானோர் அன்றாடம் எடுத்துக்கொள்கிற உணவுகளில் ஒன்று முட்டை. குறிப்பாக, இதில் அதிக அளவில் புரதச்சத்து இருப்பதால் குழந்தைகள் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் தினந்தோறும் தவறாமல் முட்டை சாப்பிடுகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல முட்டை விற்பனை நிறுவனமான ‘எக்கோஸ்’ (Eggoz) விற்பனை செய்யும் முட்டைகளில், ‘நைட்ரோபுரான்’ எனப்படும் கேன்சரை உருவாக்கக்கூடிய, தடைசெய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தின் எச்சங்கள் இருப்பதாக இணையத்தில் வெளியான ஒரு அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது பொதுமக்களிடையே முட்டையின் தரம் குறித்த அச்சத்தை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து, FSSAI தனது அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பிராண்டட்(Branded) நிறுவனங்களின் முட்டைகள் முதல் சாதாரண சில்லறை விற்பனையில் உள்ள முட்டைகள் வரை அனைத்து வகைகளிலும் மாதிரிகளைச் சேகரித்து, நாடு முழுவதும் உள்ள 10 பிரத்யேக ஆய்வகங்களுக்குச் சோதனைக்காக அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏனெனில், முட்டையை வேகவைத்தலோ அல்லது சமைத்தலோ கூட இந்த வேதிப்பொருட்களின் எச்சங்கள் அழியாமல் அப்படியே இருக்கும். இது பொது சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
தாங்கள் விநியோக்கிற முட்டகளில் நைட்ரோபுரான்கள் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள எக்கோஸ் நிறுவனம், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் முட்டைகள் பாதுகாப்பானவை.
2025 டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட சமீபத்திய ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின்படி, தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் அல்லது மருந்துகளின் எச்சங்கள் எதுவும் எங்கள் முட்டைகளில் இல்லை (Below the Limit of Quantification – BLQ). நுகர்வோரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்தச் சோதனை முடிவுகளைத் தங்கள் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.
இருப்பினும், பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு தழுவிய சோதனையைத் தொடங்கியுள்ளது.
