அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போரை நிறுத்தி, அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சில் தீர்வு காணாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ரஷ்ய ராணுவ தளபதிகளின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிபர் புதின்,  பேச்சுவார்த்தைகள் மூலம் இருதரப்பு மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புவதாக தெரிவித்தார். ராஜாங்க ரீதியில் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சிக்கும் என்று குறிப்பிட்ட அதிபர் புதின், ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க தவறினால், உக்ரைனில் தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் என்றும் கூடுதலான நிலப்பரப்பு கைப்பற்றப்படும் என்றும் அதிபர் புதின் கூறினார்.

இதனிடையே அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும்விதமாக ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version