டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 8வது பயங்கரவாதியை  தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில்நிலையம் சிக்னல் அருகே கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை பயங்கர கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 15 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், உமர் நபி என்பவன் மனித வெடிகுண்டாக செயல்பட்டு, தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மேலும், உமர் நபிக்கு நெருக்கமானவர்களை NIA கைது செய்து வருகிறது. கார் குண்டு வெடிப்பு சம்பவம்  தொடர்பாக அரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள அல்பலாஹ் பல்கலையில் பணியாற்றும் மருத்துவர் உள்ளிட்ட 7 பயங்கரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பிலால் நசீர் மல்லா என்ற நபரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், உமர் நபிக்கு ஆயுத தளவாட போக்குவரத்துக்கு உதவியது தெரியவந்தது. தொடர்ந்து நசீர் மல்லாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version