டெல்லி கலவர வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறின. இதில், 53 பேர் உயிரிழந்தனர், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில், கலவரத்தை திட்டமிட்டு கட்டமைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்கள், நடந்த கலவரத்தில் முக்கிய பாத்திரங்களை வகித்தது முதற்கட்ட பார்வையில் தெரியவந்துள்ளதாகக் கூறி ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது.

இதையடுத்து, உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது ஆகியோர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியது.

சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் (UAPA), ஜாமீனுக்கான வரம்பு அதிகமாக உள்ளது. அனைத்து மேல்முறையீட்டாளர்களும் குற்றத்தின் அடிப்படையில் சமமான நிலையில் இல்லை என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு மேல்முறையீட்டையும் தனித்தனியாக ஆராய்வது அவசியமாகிறது. மற்ற குற்றவாளிகளுடன் ஒப்பிடும்போது, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளனர்.

உமர் காலித் மற்றம் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு எதிராக முதல்நிலை குற்றச்சாட்டுக்கள் இருப்பதற்கான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பித்துள்ளது. இதில், நீதிமன்றம் திருப்தி அடைகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையின் இந்த கட்டத்தில் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது நியாயமற்றது.

அதேநேரத்தில், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அது நீர்த்துப்போகச் செய்யாது. சில கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அவர்களை ஜாமீல் விடுவிக்க வேண்டும். நிபந்தனைகளை அவர்கள் மீறினால் அவர்களது ஜாமீன ரத்து செய்யப்படும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version