திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

மொழிப்போர் தளபதி என்றும், எல்.ஜி. என்றும் நம்மால் அன்புடன் அழைக்கப்பட்ட தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் அண்ணன் எல்.கணேசன் அவர்கள் இன்று காலை 5.30 மணி அளவில் இயற்கை அடைந்தார் என்ற செய்தியை சமத்துவ நடைபயணத்தின் போது கேட்டு பெரிதும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூரில் பிறந்த அண்ணன் எல்.ஜி அவர்கள், இளமைப் பருவத்திலேயே அறிஞர் அண்ணாவின் தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றினார்.

பேரறிஞர் அண்ணா அவர்களிடமும், முத்தமிழ் அறிஞர் அண்ணன் கலைஞர் அவர்களிடமும் என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்த அந்தக் காலம் முதல் இன்று வரை என் மீது அளப்பரிய அன்பும், பாசமும் கொண்டிருந்தவர் அண்ணன் எல்.ஜி. ஆவார்.

1965 ஆம் ஆண்டில் ஆதிக்க இந்தியை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர் பட்டாளம் நடத்திய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி வெற்றி பெற அண்ணன் எல்.ஜி. அவர்கள் முனைப்போடு பணியாற்றினார்.

மாணவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளராக அவர் பணியாற்றியபோது, அவருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை அணிதிரட்டி போராடிய நினைவுகள் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழுமையான வெற்றியையும், எழுச்சியையும் பெறுவதற்கு அச்சாணியாக பாடுபட்ட தலைவர்களில் அண்ணன் எல்.ஜி. முதன்மையானவர் ஆவார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில், மூதறிஞர் ராஜாஜி அவர்களிடமே இந்தித் திணிப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு அவரை திணறடிக்கச் செய்தவர் அண்ணன் எல்.ஜி.

ஊராட்சி மன்றத் தலைவராக 45 ஆண்டு காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றி, நான் பிறந்த கலிங்கப்பட்டி கிராமத்தைப் போல பொது சுடுகாடு, அனைவருக்கும் பொதுவான குளம் ஆகியவைகளை உருவாக்கி சமத்துவ நெறியைப் பின்பற்றிக் காட்டியவர் அண்ணன் எல்.ஜி. ஆவார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பேரவைச் செயலாளராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய அண்ணன் எல்.ஜி அவர்கள், மறுமலர்ச்சி தி.மு.கழகம் மலர்ந்தபோது, கழகத்தின் அவைத் தலைவராக சிறப்புடன் பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டு இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பொடா சிறைச்சாலையில் நான் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் கழகப் பணி தொய்வின்றி தொடரவும், என் விடுதலைக்காக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியதில் சிறப்பாகப் பணியாற்றியதையும் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

அவரின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை தஞ்சை திலகர் திடலில் கழகத்தின் சார்பில் மாநாடு போல நடத்தி, நம் நினைவில் வாழும் அண்ணன் பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகன் அவர்களை அழைத்து வாழ்த்துரைக்கச் செய்து, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் அண்ணன் எல்.ஜி. அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தோம்.

அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கு பேரிழப்பு ஆகும். தன்னிகரற்ற அவரது பொதுப்பணிக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, அவரது மறைவால் துயரம் அடைந்துள்ள அவரது துணைவியார்  சகோதரி கமலா உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும், தோழர்களுக்கும் என் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version