டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே துபாயிலிருந்து தனது மகனுடன் பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார். ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஹைதராபாத் வந்த அவர், துபாயில் தான் நேரில் கண்ட போர்ச் சூழல் குறித்த அதிர்ச்சிகரமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்திருந்த வேளையில், வானில் ஏவுகணைகள் பறந்ததைக் கண்டு கடும் அச்சமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது வீட்டின் மேலேயே ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை  நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்ட சானியா மிர்சா, அந்தத் தருணங்கள் மிகவும் பயங்கரமானவை என்று விவரித்தார். “யாராவது தங்களது குழந்தைகள் இத்தகைய போர்ச் சூழலை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்களா? அந்த இடமே மிகவும் அமைதியற்றதாக மாறியிருந்தது. பாதுகாப்பற்ற உணர்வு மேலோங்கியதால், உடனடியாக அங்கிருந்து கிளம்பி இந்தியா வர முடிவு செய்தேன்,” என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.

தற்போது தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் குடும்பத்தினருடன் இருக்கும் சானியா, போர் பதற்றங்கள் குறைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார். உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version