அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட SIR படிவங்களைப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்த தீவிர திருத்த செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது.

அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பினை உறுதிசெய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது அக்.27 நாளிட்ட 23/2025-ERS (Vol II) எண்ணிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு, நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட படிவங்களைப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும் போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அந்த படிவங்களில் உள்ள விவரங்கள் ‘தன்னால் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது’ என்ற உறுதிமொழியினையும் வழங்க வேண்டும்.

அவ்வாறு பெறப்படும் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து, அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிப்பார்கள். வாக்காளர் பதிவு அலுவலர் அப்படிவங்களை ஆய்வு செய்து, தேவைக்கேற்ப பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version