திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்த விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலரை கத்தியால் குத்த இளைஞர் ஒருவர் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைகுண்ட ஏகாதசியான இன்று திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் போலீசாருடன் திடீரென கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் தகாத வார்த்தைகளால் அனைவரையும் திட்ட ஆரம்பித்து பிரச்சனை செய்து கொண்டு இருந்தார். இதனால் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ராமகிருஷ்ணன் அந்த இளைஞரிடம் விசாரித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு தலைமை காவலரை தாக்க முயன்றார். மேலும் தலைமை காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, அவரை குத்துவதற்காக பாய்ந்ததால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்து அங்கும் இங்கும் நாலாபுறமும் ஓடினர்.
இதை சற்றும் எதிர்பாராத தலைமை காவலர் ராமகிருஷ்ணன் தனது பெல்ட்டை கழட்டி வீசியபடி தன்னை தற்காத்துக்கொண்டு கத்தியை கீழே போடுமாறு கூறிக்கொண்டு அவரை மடக்கி பிடிக்க முயன்றார். இதை தொடர்ந்து அங்கு வந்த மற்ற காவலர்கள் இணைந்து கத்தியுடன் பாய்ந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் மதுரையை சேர்ந்த இளங்கோ என்பதும், அவர் போதையில் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த இளைஞர் கத்தி, மிளகாய்ப்பொடி போன்றவற்றை உடன் எடுத்து வந்திருந்ததால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

