பீகாரில் போலி என்கவுன்டரில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் போஜ்பூர் மாவட்டம் ஷாப்பூர் காவல் நிலையப் பகுதியில் ஜூன் 17ம் தேதி பாரத் பூஷன் திவாரி (28) என்ற இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பீகார் அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது போலி என்கவுன்டர் என்று கூறி குடும்பத்தினரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றப் பின்னணி இல்லாத நபர் கொல்லப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  துப்பாக்கியை வைத்துக் கொண்டு பூஷன் திவாரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தொடர்பான விசாரணைக்கு சென்ற போது போலீசார் மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், தற்காப்புக்காக சுட்டதில் பூஷன் திவாரி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே என்கவுன்டர் சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் நோக்கம், சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையான நடுநிலை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் ஆராய்வதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பூஷன் திவாரி என்கவுன்டர் மரணத்தின் உண்மைத்தன்மை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலி என்கவுன்டர்கள் சாதியின் அடிப்படையில் நடத்தப்படுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் முழுமையான விசாரணையை வலியுறுத்திப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது தடியடியும் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version