ஆந்திராவில் ரூ.80ஆயிரம் கடன் வாங்கிய நபரின் இளம் மனைவியை சாலையோர மரத்தில் கட்டி வைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குப்பம் என்ற பகுதியை சேர்ந்தவர் முனி கந்தப்பா. இவர் தன்னுடைய நண்பரான திம்மராயப்பா என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80,000 பணத்தை வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். மாதம் ரூ.8,000 வட்டியாக கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு முனி கந்தப்பா கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கூலி வேலை செய்து வரும் திம்மராயப்பா, சில மாதங்கள் வட்டி கட்டி வந்த நிலையில், அவரால் வட்டியும் கட்ட முடியவில்லை, அதேப் போல் அசலையும் திருப்பி செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. பணத்தை கேட்டு முனி கந்தப்பா அழுத்தம் கொடுக்க, மன உளைச்சலில் இருந்த திம்மராயப்பா, தனது மனைவி ஸ்ரீஷா மற்றும் 2 குழந்தைகளை விட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
திம்மராயப்பாவின் மனைவி ஸ்ரீஷா கூலி வேலை செய்து குழந்தைகளை பார்த்துக் கொண்டு, வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாத காலமாக ஸ்ரீரிஷாவால் வட்டி செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனி கந்தப்பா, தனது குடும்பத்துடன் ஸ்ரீஷா வீட்டிற்கு சென்று கடனை திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஸ்ரீஷாவின் முடியை பிடித்து இழுத்து சென்று சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் கட்டி வைத்துள்ளார் முனி கந்தப்பா.
தகவலின் பேரில் அங்கு வந்த குப்பம் போலீசார் ஸ்ரீஷாவை விடுவித்ததுடன், முனி கந்தப்பா அவருடைய மனைவி, மகன், மருமகள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முதல்வரின் சொந்தத் தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பற்றி அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் குடும்பத்தாரை போலீசார் கைது செய்துள்ளனர்.