19-வது ‘ரோஜ்கார் மேளா’ (Rozgar Mela) திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் புதிதாகப் பணியில் சேர்ந்த 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

காணொளி காட்சி வாயிலான நிகழ்வு, நாடு முழுவதும் 47 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் ரயில்வே, உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, நிதிச் சேவைகள் மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் பணியில் சேர உள்ளனர்.

இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, இதுவரை 18 கட்டங்களாக சுமார் 12 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்கள் ‘விக்சித் பாரத்’ (Viksit Bharat – வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

உலக நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உலகளாவிய அனுபவத்தையும் பெற்றுத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். புதிய பணியாளர்கள் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version