தமிழக முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற தவெக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த நடிகர் விஜய்யைக் ஆர்.பி.உதயக்குமார் கடுமையாகச் சாடினார். எந்தவித உழைப்பும், மக்கள் போராட்டமும் இல்லாமல் நேரடியாகத் தேர்தல் களத்தைச் சந்தித்துவிட்டு, தம்பி விஜய் இப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். “தமிழக மக்களுக்கு நீங்கள் ஆற்றிய உழைப்பு என்ன, போராட்டக் களம் என்ன என்பதை ஒரே ஒருமுறை பட்டியலிட்டுக் காட்டுங்கள்” என்று அவர் சவால் விடுத்தார்.
“கஜா புயல், சுனாமி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய கொரோனா பேரிடர் காலங்களில் நீங்கள் எங்கு போனீர்கள், மாங்காய் பறிக்கப் போனீர்களா? தமிழ்நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற நீங்கள் எப்போதாவது களத்தில் இறங்கிப் பாதுகாப்பு அரணாக நின்றிருக்கிறீர்களா? முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற சட்டப் போராட்டங்களில் தமிழக உரிமைகளை மீட்க நீங்கள் என்ன பாடுபட்டீர்கள்? சிறு வயது முதல் சினிமாவில் நடித்து, சொகுசாக விமானத்தில் பறந்து உங்கள் குடும்பத்தை மட்டுமே வளர்த்துக் கொண்டதாகவும், இதனால் தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த தியாகம் என்ன?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை ஆர்.பி.உதயகுமார் எழுப்பினார்.
தமிழகத்தில் மேகதாது விவகாரம், விவசாயிகளின் பயிர்க்கடன் பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது, மின்சாரத் தடை, போதைப்பொருள் நடமாட்டம் எனப் பல்வேறு சவால்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இதையெல்லாம் 25 நாட்களில் சர செய்ய வேண்டுமென சொல்லவில்லை என்றும் ஆனால், இந்த முக்கியப் பிரச்சினைகளுக்கு உங்களிடம் என்ன தீர்வு இருக்கிறது, என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்பதைப் பற்றியாவது மக்கள் மத்தியில் பேசியிருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினார். இன்னும் நடிகராகவே இருந்து மக்களிடத்தில் நடித்துக் கொண்டிருக்காமல், எப்போது முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் பக்குவத்தோடு பேசப் போகிறீர்கள் தம்பி விஜய்?” என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவைக் கிள்ளி எறியும் கீரையாக எண்ணி முதல்வர் விஜய் தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் குற்றம்சாட்டிய ஆர்.பி.உதயகுமார், அதிமுகவின் பெயரைக்கூட உச்சரிக்கத் தைரியமில்லாமல் மற்றும் பலர் என்று பேசுவதாக அவர் விமர்சித்துள்ளார். அதிமுகவை எந்தளவு அவமானப்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு அதிமுக எனும் சிங்கக் கூட்டம் சிலிர்த்து எழும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
