கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, செல்போன்களில் சன்சார் சாத்தி செயலியை கட்டாயம் பதிவேற்றியிருக்க வேண்டும் என்று செல்போன் நிறுவனங்களுக்கு பிறப்பித்த உத்தரவை மத்திய தொலைத் தொடர்புத் துறை திரும்ப பெற்றுள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் அண்மையில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், செல்போன் இறக்குமதி நிறுவனங்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது. அதில், மத்திய தொலைத் தொடர்புத் துறையின் சன்சார் சாத்தி செயலி அனைத்து செல்போன்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை செல்போன் விற்கப்படும் முன் உறுதி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் எதிர்ப்பு தெரிவித்தது. இதேபோல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதுபோல அடுத்தடுத்து எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து, சன்சார் சாத்தி செயலியை கட்டாயம் பதிவேற்றியிருக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு பிறப்பித்த உத்தரவை மத்திய தொலைத் தொடர்புத் துறை திரும்பப் பெற்றுள்ளது. சன்சார் சாத்தி செயலியை ஏற்கும் நிலை அதிகரித்துள்ளதால், அந்த செயலியை கட்டாயமாக்குவதில்லை என மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
